شهادة أن لا اله إلا الله என்பதன் சுருக்கமான பொருள்: உண்மையில் வணங்கி வழிபடத் தகுதியானவன் அழ்ழாஹ் மாத்திரமே என்று உள்ளத்தினால் உறுதி கொண்டு நாவினால் மொழிகிறேன் என்பதாகும்.
شهادة أن محمدا رسول الله صلى الله عليه وسلم என்பதன் பொருள்: நிச்சயமாக எங்கள் தலைவர் முஹம்மத்து அவர்கள் மனித, ஜின் வர்க்கங்களாகிய உலகத்தார் அனைவரும் அவர்களின் ஷரீஅத்தை ஈமான் கொண்டு அவர்களை பின்பற்றுவதற்காக வேண்டி அவர்களுக்கு அழ்ழாஹ்வினால் அனுப்பப்பட்டவர்கள் என்றும், அழ்ழாஹ்வினால் அறிவிக்கப்படும் அனைத்தையும் மக்களுக்கு எத்திவைப்பதில் அவர்கள் உண்மையாளர் என்றும் உள்ளத்தினால் உறுதி கொண்டு நாவினால் மொழிகிறேன் என்பதாகும்.
இரு ஷஹாதஹ் கலிமஹ்களின் நோக்கம் இல்லாமையிலிருந்து உருவாக்கும் ஆற்றல் (தெய்வீகம்) எனும் தன்மையை அழ்ழாஹ் அல்லாதவருக்குக் கொடுக்காது, அதனை அழ்ழாஹ்விற்கு மாத்திரம் தரிபடுத்துவதுடன் எங்கள் தலைவர் முஹம்மத் து அவர்களின் ரிஸாலத்தை ஏற்றுக்கொள்வதாகும்.
அழ்ழாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்:
وَمَنْ لَّمْ يُؤْمِنْ بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرً
விளக்கம் :
“யார் அழ்ழாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளவில்லையோ நிச்சயமாக நாங்கள் நிராகரித்தோருக்கு கொழுந்து விட்டெரிகின்ற நெருப்பை தயார் செய்து வைத்துள்ளோம்.”
அத்தியாயம் : அல் பத்ஹ_. வசனம் : 13
இவ்வசனம் முஹம்மத் து அவர்களை யார் ஈமான் கொள்ளவில்லையோ அவர் காபிர் தான் எனும் விடயத்தில் மிகத் தெளிவானதாகும். எனவே யார் இவ்விடயத்தில் மறுப்புத் தெரிவிப்பாரோ அவர் குர்ஆனை மறுத்தவராகி விடுகின்றார். யார் குர்ஆனை மறுக்கின்றாரோ அவர் காபிராகி விடுகின்றார்.
“இஸ்லாம் மார்க்கம் அல்லாத வேறு ஒன்றைத் தனது மார்க்கமாக எடுத்துக் கொண்டவர் மேலும் அவரைக் காபிர் என்று ஏற்றுக்கொள்ளாதவர் அல்லது (அவர் காபிரா? அல்லது காபிர் இல்லையா? என்று) சந்தேகிப்பவர் அல்லது அவர் காபிர் என்றோ அல்லது காபிர் இல்லையென்றோ நான் சொல்லமாட்டேன் என்று நிறுத்திக்கொள்பவர் இவர்கள் அனைவரும் காபிராகிவிடுவார்கள்” என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள்.
இரு ஷஹாதஹ் கலிமஹ்வாகிய أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله என்பதை அல்லது அவ்விரண்டின் அர்த்தத்தைப் பொதிந்த அறபுப் பாஷை அல்லாத வேறு பாஷையினால் இருப்பினும் அவ்விரண்டையும் மொழியாமல் ஈமான், இஸ்லாம் மற்றும் ஸாலிஹான நல் அமல்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை உறுதியாக அறிந்து கொள்வீர்!
இஸ்லாம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு வாழ்நாளில் ஒரு தடவை இரு ஷஹாதஹ்வை மொழிந்திருத்தல் போதுமானதாகும். மேலும் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவ்விரு ஷஹாதஹ் கலிமஹ்வையும் ஒவ்வொரு தொழுகையிலும் மொழிவது கட்டாயமாகும். இது காபிராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் நுழைய விரும்பும் ஒருவர் விடயத்திலாகும்.
எனவே இஸ்லாத்தின் அடிப்படையில் வாழ்ந்து, இரு ஷஹாதஹ் கலிமஹ்வையும் ஏற்று உறுதி கொண்டிருந்த ஒருவரைப் பொறுத்தமட்டில் அவ்விரண்டையும் மொழிவது நிபந்தனையிடப்பட மாட்டாது. மாறாக அவர் அவ்விரண்டையும் மொழியவில்லையென்றாலும் முஸ்லிமாவார்.
அழ்ழாஹ் கூறியதாக முஹம்மத் து அவர்கள் கூறியுள்ளார்கள்:
“وما تقرَّبَ إليَّ عبدي بشىءٍ أحبَّ إليَّ مما افتَرضتُ عليه”
“நான் கடமையாக்கிய விடயங்களை நிறைவேற்றுவதை விட என்னால் பொருந்திக்கொள்ளப்பட்ட வேறு எதைக் கொண்டும் எனது அடியான் எனது றஹ்மத்தை நெருங்குவதில்லை”.
இது ஹதீஸ் குத்ஸீயாகும். இமாம் புகாரீ இதனை அறிவித்துள்ளார்கள். மிகச்சிறந்ததும், முதல் கடமையுமானது அழ்ழாஹ்வையும், அவனது தூதர் முஹம்மத் து அவர்களையும் ஈமான் கொள்வதாகும். முஹம்மத் து அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் என்று உறுதிகொள்ளாமல் வணக்கத்துக்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்பதை மாத்திரம் உறுதிகொள்வது போதுமாகாது. அழ்ழாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:
قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لا يُحِبُّ الْكَافِرِين
விளக்கம் :
“நபியே! அழ்ழாஹ்வுக்கும், தூதருக்கும் வழிப்படுங்கள் என்று கூறுங்கள். அவர்கள் அதைப் புறக்கணித்தால் நிச்சயமாக அழ்ழாஹ் அந்தக் காபிர்களைப் பொருந்திக்கொள்ளமாட்டான்.”
அத்தியாயம்: ஆல இம்றான் வசனம்:32
அதாவது எவர்கள் அழ்ழாஹ்வையும், தூதரையும் ஈமான் கொள்ளாது புறக்கணித்தார்களோ அவர்கள் காபிரானதால் அவர்களை அழ்ழாஹ் பொருந்திக் கொள்ளமாட்டான். இவ்வசனத்தில் அழ்ழாஹ்வுக்கும், தூதருக்கும் வழிப்படுங்கள் என்பதைக் கொண்டு நாடப்படுவது அவ்விருவரையும் நம்பிக்கை கொள்வதாகும். எனவே யார் அழ்ழாஹ்வையும், அவனது தூதரையும் ஈமான் கொள்ளவில்லையோ அவர் காபிர் என்பதற்கு இது ஒரு ஆதாரமாகும். மேலும் நிச்சயமாக அழ்ழாஹ் அவரை அவரின் குப்ரின் காரணமாக பொருந்திக் கொள்ளமாட்டான்.
எனவே யார் “நிச்சயமாக அழ்ழாஹ் முஃமின்களையும், காபிர்களையும் பொருந்திக் கொண்டுள்ளான்; ஏனெனில் அவன்தான் அனைத்தையும் படைத்தான்” என்று கூறுகின்றாரோ திட்டமாக அவர் குர்ஆனைப் பொய்ப்பித்துவிட்டார். இவ்வாறு கூறும் நபரிடத்தில் “அழ்ழாஹ் அனைத்தையும் படைத்தான் ஆனால் அனைவரையும் நேசிக்கமாட்டான்” எனக் கூறப்படும்.
-
Next Post
عمدة الراغب في مختصر بغية الطالب